எப்பப்பா கல்யாணம்...?
இப்போது எல்லாம் “அப்புறம்” என இழுத்தாலே போச்சுடான்னு ஆகிவிட்டது. “ பிறகு, உங்களுக்கு எப்போ கல்யாணம்? ” 25 வயதைக் கடந்தவுடன் எல்லோரும் அடிக்கடி கேட்கிற இந்த கேள்வி தான் என்னையும் சீண்டி பார்த்துக் கொண்டிருந்தது. “ என் கல்யாணத்துக்கு என்னங்க அவசரம்” இதுவும் வழக்கமாக எல்லோரும் சொல்லும் பதில்தான். அன்று எனக்கும் பயனாகியது...
விழாக்களுக்குப் போனாலே இப்படித் தான். எல்லோருக்கும் யாரையாவது எதாவது கேட்க வேண்டும். சரி என்ன செய்வது, நண்பனுடைய மகனின் பெயர்ச் சூட்டு விழாவிற்கு வந்திருக்கிறோம், அமைதியைக் கடைப்பிடிப்போம் என இருந்து விட்டேன். அடடா, உங்களுக்கு என் நண்பனை அறிமுகப் படுத்த மறந்து விட்டேன். என் நண்பன் பெயர் தயாளன். நாங்கள் இருவரும் ஒரே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிறந்தது வளர்ந்தது ஒரே இடம் என்பதால், ஆரம்பப்பள்ளியில் இருந்தே இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தோம். இன்று அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. ம்ம்ம்.. முதல் மகன் என்பதால் பெயர்ச் சூட்டு விழாவை கோலாகலமாகாவே ஏற்பாடு செய்திருந்தான் தயாளன். ஆரம்பப் பள்ளியில் எங்களுடன் படித்த எல்லா நண்பர்களுக்கும் அழைப்பும் விடுத்திருந்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் ஆவலுடன், சிறிதளவு தயக்கமும் இருந்தது. வரப் போகிற நண்பர்களில் முக்கால்வாசிப் பேரின் திருமணத்திற்கு என்னால் போக முடியவில்லை. காரணம் வேறெதுவாக இருக்க முடியும், வேலையில் விடுப்புக் கிடைக்கவில்லை என்பதைத் தவிர! இதைச் சொன்னால், ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள். “நீங்க யாரு, வேற லெவெல்ல... எங்க விஷேசங்களுக்கு எல்லாம் வருவீங்களா” அதே பாட்டை அவர்கள் பாடப்போகிறார்கள், நான் நோகப் போகிறேன்.
இதோ, தேவன் வந்து விட்டான், அவன் கூட யாரு, அவன் மனைவியா?.. ஆனால் அவன் அனுப்பிய திருமணப் படத்தில் மணப் பெண்ணின் முகம் வேறு மாதிரியல்லவா இருந்தது. ம்ம்ம்.. என்னமோ அவனே சொல்லும் வரை நாம் எதுவும் கேட்க வேண்டாம். அடுத்தது யாரு, அதோ இடுப்பில் ஒன்று, கையைப் பிடித்தவாறு இரண்டு, வயிற்றில் ஒன்று என படையையே திரட்டிக் கொண்டு வருகிறாள் என் வகுப்பின் வாயாடி திலோத்தமா. அந்த வாயாடி இன்னும் வாயாடியாகத்தான் இருக்கிறாள். “திலோ, சங்கர், கார்த்திக் எல்லாம் வரலே?” “ ஏங்.. இவ்வளவு நேரம் ஜோப்புலதான் இருந்தாங்க, இப்போதான் எகிறி குதிச்சுப் போனாங்க.” “ ஹாஹா.. பழைய ஜோக்குத் திலோத்தமா, இன்னும் உன் போக்கை விடல்லையா?” “ கார்த்திக் வந்துக்கிட்டு இருக்கான். சங்கர் வரமாட்டான்னு நினைக்கிறேன். உனக்குத் தெரியும் தானே, கல்யாணமாகி 3 வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லன்னு வருத்தப்படுறான்.” பேசி முடித்தாள் திலோ.
இதுவரையில் என் முகத்தில் இருந்த புன்சிரிப்பும் இப்போது இல்லாமல் போனது. “டேய் குமரா” இது யாருன்னுத் திரும்பிப் பார்த்தால் கார்த்திக், என் வகுப்பின் டமாரம். நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம். ஊரில் உள்ள எல்லா கதைகளையும் ஒன்று விடாமல் சொல்லுவான். “சொல்லுடா, அப்புறம் என்ன சங்கதி” என்றேன். காலமான காவ்யாவின் கணவர் மறுமணம் செய்து கொண்டது முதல் கணேசன் மனைவியைப் பிரிந்த கதை வரை கூறினான். எல்லாமே அடுத்தவரின் குடும்பக் கதைகள். அவன் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே திலோ என்னைத் தனியாக அழைத்தாள். “என்ன திலோ?” என்றேன். “ டேய், பவித்ரா வந்திருக்கா, பேசலையா?”..
“யார் இந்த பவித்ரா” இதைத் தானே யோசிக்கிறீர்கள்?. பவித்ராவும் என்னோடு படித்தவள் தான். தயாளனுக்கு அடுத்து, நான் நல்ல நட்பு கொண்டிருந்தது பவித்ராவுடன் தான். அவளைக் கொஞ்சம் கூடுதலாகவே பிடித்திருந்தது. வெளிப்படையாகவே சொல்ல வேண்டும் என்றால் “ நீ யாரைக் கல்யாணம் கட்டிக்கணும்னு” யாராவது கேட்டால் பவித்ராவைதான் சொல்லுவேன். அறியாத வயதில் சொன்னது, அதுவே போகப் போக என் மனதில் ஆழமாகிப் போனது.
6 ஆண்டு படித்து முடித்தவுடன் அவளை நினைத்து உருக ஆரம்பித்து விட்டேன். போதாக் குறைக்கு என் நண்பர்களும் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை என் காதலையும் அவளிடம் வெளிப்படுத்தி விட்டேன். ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.
அவள் திருமணத்துக்குக் கூட என்னை அழைத்திருந்தாள், வேலையைக் காரணம் காட்டி நான் போகவில்லை. இது அவமரியாதையான காரியம் என நினைக்கிறீர்களா?. அப்போது எனக்கு அதுதான் சரியென்று தோன்றியது. இத்தனை ஆண்டுகளில், ஒரு முறை கூடவா அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை? என்னுடன் பழகிய காலங்களில் ஒரு தடவை கூடவா அவள் மனம் சஞ்சலம் கொள்ள வில்லை? இந்த கேள்விகளை நெஞ்சில் சுமந்துக் கொண்டு என்னால் எப்படி அவள் திருமணத்தைப் பார்த்திருக்க முடியும்.
ம்ம்.. காலம் கடந்து விட்டது இனி பேசி என்ன பயன். “டேய் குமாரு, அதோ பவித்ரா டா” என திலோ பவித்ராவை நோக்கி கையை நீட்டுகிறாள். என் கண்கள் அவளின் விரல் நுனியில் பட்டு பவித்ரா பக்கம் பாய்ந்தது. மின்மினி பூச்சிக் கூட்டத்தின் நடுவே செந்தாமரையின் அழகைக் கண்டது போல அவள் முகம் அந்த அலங்கார விளக்குகளுக்கு மத்தியில் தோன்றியது. மனம் சற்று தடுமாறினாலும், மீண்டும் நிலையாக நின்றது. அவள் அருகில் அவளின் கணவரும் செழிப்பாகவே தெரிந்தார். என்னங்க பண்றது... நானும் மனுஷன்தானே. கோபத் தாபம் இருக்கத்தானே செய்யும்! இருந்தாலும், அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது; நெருங்கியும் சென்றேன். ஆனால் பேச விருப்பம் இல்லாததுப் போல் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தெரிந்த முகமே திருப்பிக் கொண்டால், தெரியாத முகத்திடம் என்ன பேசுவது..? தலைக் குனிந்து திரும்பிவிட்டேன்.
அத்தனையையும் வேடிக்கைப் பார்த்திருந்தாள் போல திலோ. என்னை நோக்கிக் குடுகுடுவென நடந்து வந்தாள். “என்னடா, அவ உன்கிட்ட பேசலையா?” எனக் கேட்டாள். என்னைச் சமாதானம் படுத்திக் கொள்ளும் விதமாக “ நான் அவ கல்யாணத்துக்கு வரலைன்னு கோபம் போல “ என்றேன். அதற்கு திலோ, எதோ ரகசியத்தைப் பகிர்வதுப் போல் அருகில் வந்தாள். “அவ ஹஸ்பண்ட் கொஞ்சம் சந்தேகப் பேர்வழியாம். எந்த ஆம்பள கிட்ட பேசனாலும் சந்தேகப் படுவாராம். அதான் உன்கிட்டயும்..” என இழுத்தாள்..
எனக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. உலகம் தெரியாத வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட திலோ, “பையன் நல்ல இடத்துல வேலை செய்றானு, அவன் குணத்தைப் பார்க்காமல் கட்டி வைக்கப்பட்ட பவித்ரா.... உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்னையைக் கூட பெரிதாகப் பார்க்காமல் இல்லறத்தில் தள்ளிவிடப்பட்ட காவ்யா.. தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் மனைவி என ஒருத்தி இருந்தாக வேண்டும் என ஊருக்காக கல்யாணம் செய்து கொண்ட சங்கர்..
ஏன் இந்த திருமணம் என்பது இவர்களின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது? ஊரறிய திருமணம் செய்து கொள்வதை விட ஊருக்காக திருமணம் செய்துக்கொள்பவர்கள் அதிகம். திருமணம் என்பது நம் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு நாம் வைக்கும் பெயர் மட்டுமே. அந்த பெயர்ச்சூட்டு விழாவிற்கு வந்து போகும் விருந்தாளிகளா வாழ்க்கையை வாழப் போகிறார்கள்..? மனசுக்கு பிடித்தது போல் ஒரு துணைக் கிடைத்தால் யார் திருமணத்தை வேண்டாம் என்பார்கள்.
எனக்கு மட்டும் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்ற ஆசையா என்ன? என் விருப்பத்திற்கு ஏற்ப பெண் அமைய வேண்டும் அல்லவா?.. போதாக்குறைக்கு என் நண்பர்களின் திருமண வாழ்க்கை வேறு பீதியைக் கிளப்புகிறது. இது என்னமோ என் பிதற்றல் என எண்ணிவிட வேண்டாம். குறிப்பிட்ட வயதில் திருமணமாகாதவர்கள் எல்லோருடைய மனக் குமுறலும் இதுதான். காலம் கனிந்தால் எல்லா நல்ல காரியங்களும் தானாகவே நடக்கும். தம்பி..
இதோ யாரோ கூப்பிடுறாங்க. அட நம்ப ராஜா மாமா! தோட்டத்தில் இருந்த போது என் பக்கத்து வீட்டில் இருந்தவர். மாமா மாமா என்று கூப்பிட்டே பழகிட்டோம். “அப்புறம் மாமா..எப்படி இருக்கீங்க?” என்றேன். “நல்லா இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற.. எப்போ கல்யாணம்?” என்றார். “ ஐயா சாமி, ஆள விடுங்க...”என்று எடுத்தேன் ஓர் ஓட்டத்தை.
எழுத்து: ஸ்ரீ குமரன் முனுசாமி, சிம்மோர் பேராக்
Their story realyTouching.
ReplyDeleteGod bless to them.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
ReplyDeleteபண்பும் பயனும் அது
இல்வாழ்க்கைக்கு வயது தடையல்ல, தங்கள் விருப்பத்திற்கேற்ற கண்மணி எங்கோ பிறந்திருக்கிறாள், கண்ணெதிரே கூடிய விரைவில் தோன்றுவாள்.. புரிந்துணர்வு மட்டுமே காலமெல்லாம் வாழும்.... வயது முதிர்ந்தாலும்....