அன்புடன் நான்..

மனிதனின் கற்பனா சக்தி அசாதரணமானது. அவனின் கற்பனைகளில் உதித்த பல படைப்புகளை நாம் இன்றும் ரசித்தும் அனுபவித்தும் வருகிறோம். கற்பனைக்குப் பஞ்சமில்லா காலங்களில் உருவான புராண இதிகாசங்கள் அதற்குச் சிறந்த சான்றுகள். மனிதன் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தான். ஓரிடத்திலிருந்து கொண்டே வேறோர் இடத்தில் நிகழும் சம்பவங்களைக் கண்கூடாக ரசிக்கக்கூடியவனாக இருந்தான் என்கின்றன இதிகாசங்கள். ஆனால் நடப்பு வாழ்க்கையில், அவை அதிசியக்கவைக்கும் ஆற்றல்கள் அன்று. ஒருவேளை அவை நிகழ்ந்தவையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும், ஒருவரின் கற்பனையில் உதித்தவையே அவ்வாற்றல்கள். ஆக, கற்பனையைப் பேழையில் பூட்டிவைப்பதை விட, கடைவிரிப்பதே சாலச் சிறந்தது. அதன் வழி உருவானதே “பேனா பேப்பர்”. வெறும் கற்பனையை மட்டும் காட்டாமல், என் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கவும், தமிழ்த் தாகத்தைத் தணிக்கவும் ஒரு தளம் தேவைப்பட்டது. அது உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என தோன்றியது. காகிதங்களிலும், சுவர்களிலும் கிறுக்கிய காலங்கள் உண்டு. அவை காணாமல் போனதும் உண்டு. எழுத்தின் ஊடே என் கற்பனைகளையும், உணர்வுகளையும், தமிழ்த் தாகத்தையும் பரவச் செய்ய எனக்குத் தேவைப்பட்டது காலாவதியே இல்லாத ஒரு பேனா பேப்பர். கேட்டால் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. அதனால் நானே உருவாக்கிக் கொண்டேன். வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள்! வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். யார் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால் என் மனசாட்சியும் இதையே சொன்னது. உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு வெற்றித் தருமா, தோல்வித் தருமா என்பது தெரியவில்லை. ஆனால் உருவாக்குவோம். வாழ்வா சாவா என்று சிந்திக்காமல்தான் வீரர்கள் போர்முனையில் நிற்கிறார்கள். ஜெயித்தால் கொண்டாடுவோம், தோற்றால் கொண்டாடுவார்கள் என்ற எண்ணம்தான். இது வீரர்களுக்கு. நமக்கு வெற்றியென்றால் மகிழ்ச்சி, தோல்வியென்றால் முயற்சி. ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க ஆளிருந்தால், யாரியினும் எதையும் சாதிக்கலாம். அந்த நம்பிக்கையோடுதான் என் “பேனா பேப்பர்” துளிர்த்துள்ளது. “பேனா பேப்பர்” உங்கள் நேரத்திற்குப் பயனாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. “பேனா பேப்பர்” உங்கள் எண்ணங்களைப் பிரதிப்பலிக்கும்; உங்கள் கனவுகளுக்குக் குரல் கொடுக்கும். பெற்றோரின் ஆசியோடும் நண்பர்களின் துணையோடும் உங்களின் வாழ்த்துகளோடும் பேனா பேப்பர் தயாராகிவிட்டது.
அன்புடன் ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

  1. உணர்வுகளை வெளிப்படுத்த உருவான இந்த பேனா பேப்பர், தொடரட்டும்.... தங்கள் தமிழ் தாகம் தீர, ஆனால் அது உயிர் மூச்சுக்கு சமம் அல்லவா? வாழ்த்துகள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி