கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!
கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக் கட்டம், பிரிடிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் தோட்டத்தொழிலாளர்களாக இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்டக் காலம் எனலாம். உடல் வருத்தி வேலை செய்தும் போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். உழைத்துப் பெருகின்ற பணம் உணவுக்கே போதுமானதாக இல்லை. வருமை அவர்களை வாட்டி வைத்தது. மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லை என்றே கூறலாம். பணி ஓய்வுக்காலம் வந்தவுடன் இந்தியர்கள் தாயாகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதியவர்களும் அக்காலக்கட்டத்தில் இருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டவர்கள் இந்தியர்கள். அவர்களின் உழைப்பும் பங்கும் அங்கரிக்கப்பட வேண்டும் என ஒரு குரல் எழுந்தது. தாயகம் திரும்புவதைக் காட்டிலும் மலையகத்தைத் தாயகமாக கருதி இங்கே உங்களுக்கென இருக்கின்ற இடத்தை உறுதிப்படுத்துங்கள் என்றது அக்குரல். அக்குரல் வேறு யாருடையதும் அல்ல மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவர் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களின் கம்பீரக் குரல்தான். உழைப்பால் உருவாக்கிய மலைநாட்டில் உங்களுக்கென்ற உரிமையை நிலைநாட்டுங்கள் என துவண்டு போன இந்தியர்களிடம் உரக்கச் சொன்னார். இன்று மலேசிய இந்தியர்கள் பெருமையுடன் நடமாட காரணியாகவும் திகழ்ந்தவர் துன் வீ.தி. சம்பந்தன். பெரும் செல்வந்தராக வாழ்ந்தாலும், தானம் தர்மம் என மக்களுக்குச் செலவழித்து தனது இறுதிக்காலத்தை எளிமையாக கழித்து மலேசியாவின் காமராஐர் என அழைக்கப்பட்டார். நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்பது நாம் அறிந்ததே.. பல்லின மக்கள் சுமூகமாக வாழும் போதுதான் மலேசியா உண்மையான சுதந்திரம் பெற்ற நாடாக திகழும் என்று அவர் கருதினார். அவரின் அந்நம்பிக்கையை நாமும் காப்பாற்றுவோம்! ஆகஸ்ட் மாதம், நம் நாட்டின் முக்கிய மாதம். ஏனென்று உங்களுக்கே தெரியும்.. தேசியத்தினத்தைக் கொண்டாடவிருக்கும் இந்த மாதத்தில் நமது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். நமக்குள் தேசப்பற்றை மேலோங்கச் செய்வோம்.மெர்டேக்கா மெர்டேக்கா மெர்டேக்கா!
Comments
Post a Comment