நீ ஒழுங்கா?


எங்கு எது நடக்கும், எதை வைரலாக்கலாம் என்ற விசைப்பலகை போராளிகளின் பசிக்குத் தீனிப் போட்டிருக்கிறது, கேரளாவில் சினையானை படுகொலை என்ற செய்தி! கொலையா? நீங்க பாத்திங்களா?. ம்ம்ம். அது தேவையற்றது. கிடைத்த செய்தியை அப்படியே பகிர்வோம். நமக்கும் மனசு இருக்குன்னு நாலு பேருக்கு தெரிஞ்சா சரி. லைக்ஸ் அள்ளும். அதுதான் முக்கியம். தப்பில்லை. பகிருங்கள். ஆனால் மனிதம் மீதான அவநம்பிக்கையைத் தூண்டாதீர்கள். இந்த ஒரு சம்பவத்தால்தான் மனிதம் மடிந்து விட்டது என்றால் அது நமது அறியாமை.  அனுதினமும் எங்கோ ஒரு மூலையில் மனித்தத்தையே மிரள வைக்கும் வகையில் மிருகங்களுக்கு எதிரான ஏதோ ஓர் அசாம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது நம் திரைக் கண்களில் புலப்படவில்லை அவ்வளவுதான். அதற்காக இல்லையென்று ஆகாது. 

வருத்தம்தான். கண்ணுக்குத் தெரியும் கொடூரங்களைப் பார்க்கும் போது மனமும் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன. சினை என்று தெரிந்தும் அந்த பிடியைச் செந்தாழையில் வெடி வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்த யானையால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் இல்லை பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம். ரத்தத்தை உறுஞ்சும் கொசுவை ஒரே அடியில் அடித்துக் கொல்வது போல் கொன்று விடலாம் என்று தோன்றிருக்கலாம். இல்லை உணவில் நஞ்சு வைத்து எலியைக் கொல்வது போல் யானையைக் கொல்ல முயற்சித்திருக்கலாம். அதுவும் இல்லை என்றால் பிடிக்காத பூனை மீது சுடுநீர் ஊற்றுவது போலவும், எட்டி உதைப்பது போலவும் இந்த செயலிலும் முற்பட்டிருக்கலாம். சத்தியமா தெரியலைங்க. ஆனா ஒன்னும் மட்டும் தெரிது. சமூக ஊடகத்தில் போஸ்ட் போட டேய்லி ஒரு மேட்டர் வேணும். 

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பதிவைப் பார்த்தேன். யாரும் யானையைக் கொல்வதற்காக செந்தாழையில் வெடி வைக்கவில்லையாம். அது காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டதாம். அப்போ காட்டுப் பன்றி செத்தா பரவாயில்லையா? இது என்னங்க நியாயம். நாம் வாய்க்கிழியப் பேசும் மனிதாபிமானம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவா இருக்கணும். கோழியை அடித்துச் சாப்பிடுறோம். ஆட்டை ஒரு பகுதி விடாமல் விழுங்குறோம். அப்போது தெரியாத பாவமா இப்போது தெரிகிறது. ஓஹோ.. கொன்னா பாவம் தின்னா போச்சு. அந்த கொன்செப்ட்டா? அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல். பிற உயிரைக் கொல்வதும் தவறு அதை உண்பதும் தவறு. நான் சொல்லலைங்க. தாடி வைத்த வள்ளுவர் சொன்னது. இப்போ சொல்லுங்க "நாம்" கொந்தளிப்பதில் நியாயம் இருக்கா?

ஆயிரம்தான் சொன்னாலும் சினையான யானையைக் கொன்னது தப்புதாங்கிறீங்களா?. உங்களுக்கு என்னங்க பிரச்னை?.. யானை சினையாக இருந்ததா?. நாம் அடித்துக் கொன்ன எத்தனையோ கொசுக்கள் கருவை சுமந்திருந்திருக்கலாம். நம் கண்முன் எட்டி உதைக்கப்பட்ட பூனைகள் சினையாக இருந்திருக்கலாம். விரட்டியடிக்கப்பட்ட  சொறி நாய்கள் சினையாக இருந்திருக்கலாம். அப்போது இல்லாத இறக்கம் இப்போது வந்திருக்கிறதா. ம்ம்ம். வந்தால் சரி. ஆனால் இந்த இறக்கத்தை இத்தோடு நிறுத்தி விடாமல் வாழ்க்கை முழுதும் தொடர்ந்தால் கொஞ்சமாவது நாம் செய்கின்ற இந்த அலப்பறைகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லை மற்ற கதைகளைப் போலவே இந்த கதையும் வைரல் முடிந்த பிறகு காணலாயிருக்கும். 

இந்த சம்பவத்திற்கு, யார் காரணம் எது காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இவ்வாறான சம்பவத்திற்கு என்றும் நாம் காரணமாக இருந்துவிட கூடாது. இந்த உலகத்தையே ஒரு பதிவால், ஒரு மீம்ஸால் மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்துங்கள். மாற வேண்டியது உலகம் கிடையாது. நாம்தான். வலியையும் வேதனையையும் அறிந்த நாம் அதை பிற உயிர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறோமா? இல்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். உலகத்தை ஆளும் ஆறறிவாளர்கள். இந்த உலகம் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது என்பதை உணராதவர்கள். அப்படி இருக்க மனிதம் சாகிறது மிருகம் வதைக்கப்படுகிறது என்றால் வேடிக்கையாகத்தான் இருக்கும். இந்நிலை என்று மாறுகிறதோ அன்று நாம் பேசும்  இப்பேச்சு எடுப்படும். அந்நிலை உங்களால் உருவாக்க  முடியும் என்றால், இந்த உலகைப் பிற உயிரினங்களோடு பகிர்ந்து வாழ முடியும் என்றால், எந்த உயிரும் உங்களால் வதைக்கப்படாது என்றால், மிருகவதையை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுங்கள். உங்கள் குரலைக் கேட்டாவது நான் புலால் மறுக்கிறேனா என்று பார்க்கலாம். அதுவரையில் மிருகவதையைப் பற்றி பேசும் முன் என்னை நான் கேட்கும் கேள்வி " நீ ஒழுங்கா?"..


-எழுத்து-
ஸ்ரீ குமரன்

Comments

  1. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி!

    ReplyDelete
  2. சிறப்பான கருத்துக்கள் ப்ரோ

    ReplyDelete
  3. மிகவு‌ம் அருமையான சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  4. சிறப்பான கருத்து😉

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி