குசினி


"இவளுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாத்தாலும் அரிசி இல்ல, உப்பு இல்லன்னு வந்து நின்னுருவா. இவளுக்கு எறச்சே வீட்ல இருக்குற எல்லாமே முடிஞ்சிருது" டம்ளரை உருட்டினாள் வல்லி. இத்தனையும் காதில் விழதான் செய்தது ஜானகிக்கு. வாசலில் காத்திருந்தவளுக்கு அப்படியே திரும்பிருலாம்னுதான் தோனுச்சு . ஆனால் சூடு சொரணையெல்லாம் பார்த்தா சோத்துக்கு என்ன பண்றது என்ற நெனப்பும் அவளை வாட்டியது. கால் முன்னும் பின்னும் அல்லாடியது. ஆனா அவளை நகரவிடமால், அவளின் கயிலியைப் பற்றிக் கொண்டிருந்தது அவளின் அஞ்சு வயசு பொண்ணு . "நீ வேற.. வா" என அவளை தூக்கி மடியில் வச்சுக்கிட்டாள் ஜானகி.  இடுப்பில் சுமந்தபோதுதான் குழந்தையின் பசியை அவளால் உணர முடிந்தது. பசியால் குழந்தை அழுதால் அடித்து நிறுத்தலாம். ஆனால் வயித்துக்கு தெரியுமா. குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளின் ஈரம் படிந்த கண்களோ வல்லியின் குசினியை நோக்கி காத்திருந்தன."இந்தா!" ஜானகியிடம் ஒரு மங்கில போட்ட வச்ச அரிசியை நீட்டினாள் வல்லி. "யேக்கா, 4 கோல கேட்டேன். இது பத்தாதுக்கா" என்றாள் ஜானகி. "வேணும்னா ஒரு மூட்டையை அப்படியே வந்து கொடுக்கட்டா" எரிந்து விழுந்தாள் வல்லி. எதிர்த்து பேசற நெலமை இல்ல, வாயை மூடிக்கிட்டு கொடுத்த அரிசியை எடுத்துட்டு வீட்டுக்குச் சென்றாள் ஜானகி.

"கட்டன்னா இவனதான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி கட்டிட்டு வந்தேன். 2 பிள்ளையாச்சு, இந்த மனுஷன் இன்னும் புத்தியில்லாமா குடிச்சிட்டு திரியுறான். எல்லாம் என் தலையெழுத்து. காய்க்கறி வாங்க வச்சிருந்த காச எடுத்துட்டு எங்க போய் தொலைஞ்சான்னே தெரில." வாங்கி வந்த அரிசியை குசினி அடுப்பாங்கல்லு மேலே வச்சிட்டு,  வெறகுக்கட்டைய பொறிக்கிட்டு இருந்தாள் ஜானகி. "அம்மா பசிக்குதும்மா, சீக்கிரம்" அவளின் மூத்தமகன் பக்கத்துல வந்தான். " டேய் ராசு, அப்படியே போயிரு, இருக்குற கடுப்புல சாத்திறப்போறேன், போயிரு" அதட்டினாள் பத்ரகாளியாட்டும். பக்கத்துல போனவன் அரண்டு போய்  பின்னாடியே போனான். அவனை முந்தித் தள்ளிவிட்டு குசினிக்குள் அலறிக் கொண்டு ஒடி வந்தாள் வல்லி.

கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அடக்க முடியாத அழுகையோடு வாயை பிளந்து கொண்டு கதறினாள் வல்லி. "என்னக்கா? என்னாச்சு..ஏன் அழுறீங்க.??" ஜானகி பதைபதைத்தாள். " அய்யோ ஜானகி, ராசுப்பா..."சொல்லி முடிக்காமள் தேம்பி தேம்பி அழுதாள் வல்லி. "ராசுப்பாவா? என்னக்கா ஆச்சு. அவருக்கு என்னாச்சு?.. சொல்லுங்கக்கா?.. "ராசுப்பா லோரியில அடிப்பட்டு, அங்கேயே உசுரு போச்சாம் பிள்ள.." ஜானகியைக் கட்டிப் பிடித்து கதறினாள் வல்லி. ஜானகி பேச்சு மூச்சு இல்லாமல் உறைந்து போனாள். திறந்தே கிடந்த அவளின் கண்களில் இருந்து  நீர் மட்டும் நேர்கோட்டில் வழிய தொடங்கியது.

யார் இவன், எதற்காக என்னோட வாழ்க்கையில வந்தான். நான் இவன பாக்காம இருந்திருந்தா என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். இன்னிக்கு ரெண்டு புள்ளைங்கள கையில்ல கொடுத்துட்டு இப்படி அநாதையா ஆக்கிட்டு போய்டான். எனக்கு தேவதான்.. அப்பா அம்மாக்கூட சண்டை போட்டுட்டு இவன கட்டுனேன்ல.. எனக்கு தேவதான். என்னத்துக்காக நான் இவன் பின்னாடி வந்தேன்னு தெரில..பாக்க நல்லா இருந்தான்னு லவ் பண்ணேன். ஆன நல்லா இருந்த என் வாழ்க்கைய இப்படி பாழாக்கிட்டானே. அப்பயே எங்கம்மா சொன்னுச்சு. என் பேச்ச கேக்காம போனா நீ நாசமா ஆயிருவேன்னு. எனக்கும்தான் தோனுச்சு. காதலிச்சு ஒரு வருசுத்தலே என்னை அடிச்சது, மத்த ஆம்பளைக்கூட பேசவே கூடாதுன்னு சொன்னது, என்கிட்டிருந்த கசெல்லாம் புடுங்கி சூதாடியது. அதெல்லாம் பாக்கறப்போ விட்டுடலாம்னு தோனுச்சுதான். ஆனா முடிலயே.. அதுக்குள்ள வயித்துல புள்ளைய வாங்கிட்டேனே! என்ன பண்ண?

ஆம்புளைன்னா பொண்டாட்டி புள்ளைங்கள்ல வச்சு காப்பத்தணும்னு சொல்லுவாங்க. கல்யாணம் பண்ண நாளிலிருந்து இப்போ வரைக்கும் நான்ல சம்பாதிச்சு அவன காப்பத்துனேன். ஒரு பொண்ணா நானே ஒழைச்சு இவனையும் காப்பாத்தணும்னா, இந்த கல்யாணம் எதுக்கு, இவன் எதுக்கு.  அன்பையும் காட்டல அக்கறையாவும் நடந்துக்குல. இன்னிக்கு அவனும் இல்ல. இருந்தவரைக்கும் கொடுத்த தொல்லையும் இல்ல. இனி, நான் எனக்காக வாழப் போறேன். என் புள்ளைங்களுக்காக வாழ போறேன். வழிந்த கண்ணீரையும் துடைத்தாள் ஜானகி. பிரமைப் பிடித்தவளாய் இருந்தவள், விழித்துக் கொண்டது போல் விரிந்த கூந்தலை வாரி முடித்தாள். டேய் ராசு இங்க வா, இந்த அரிசியைக் கழுவித் தா! என்று தன் மகனுக்கு ஒரு அதட்டல் போட்டாள். வல்லி ஜானகியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பொருட்படுத்தாமல் பொறுக்கி வைத்த விறகுகளை அடுக்கி நெருப்பைப் பத்த வைத்தாள் ஜானகி. ஈரமாய் இருந்த அவளின் கண்ணங்கள் அந்த நெருப்பின் வெப்பத்தில் காய்ந்து போயின.  இருள் சூழ்ந்த அவளின் குசினியில் ஒளி சூழ்ந்தது.

மனைவியை அடக்கி ஆள்பவன் ஆணல்ல. அவளை கடைசி வரை கண்கலங்காமல் காப்பாத்துபவனே உண்மையான ஆண். அதை அவன் தவறும் போது, ஆண் என்ற அந்தஸ்த்தை மட்டுமல்ல, மனிதன் என்ற அந்தஸ்த்தையும் இழக்கிறான். வீரம், துணிவு மட்டுமல்ல கண்ணியமும், கடமை தவறாமையும் ஆணுக்கு இலக்கணம்தான். அந்த இலக்கணம் ஒரு வீட்டின் குசினியின் செழிப்பில் இருந்து தொடங்குகிறது. ஆண்'மை தவறேல்!

எழுத்து,
ஸ்ரீ குமரன் முனுசாமி



Comments

  1. Replies
    1. நன்றி. உங்கள் கருத்து தொடர்ந்து எழுதும் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

      Delete
  2. ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைப் படிக்கும்போது, மீண்டும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அந்த தூண்டுதல் ஏற்பட்டிருந்தால் என் தாய்க்கு நான் செய்த சிறு தொண்டு பலன் கண்டிருக்கிறது என்றே பொருள். நன்றி🥰

      Delete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி