I Miss MCO Days!



"ஐ மிஸ் எம்.சி.ஒ டேய்ஸ்"..எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல இததான் சோசியல் மீடியா முழுக்க பார்க்கப் போறோம். மத்தவங்க போடறதுக்கு முன்னாடி நாம முந்திப்போம். ஏன்னா எனக்கு அந்த ஃபீல் ரொம்ப சீக்கிரமாவே வந்திருச்சு. என்னங்க பண்றது, வாழ்ற நிமிசத்த மறந்து, வாழ்ந்து முடிந்ததையும், வாழ முடியாததையும்தான் நாம பெருச பாக்குறோம். இது ஒரு வேள மனுஷனோட சாப கேடா இருக்கலாம். இல்ல நமக்கே நாம வச்சுக்குற ஆப்பா கூட இருக்கலாம். கடவுளுக்குதான் வெளிச்சம்.

நடமாட்ட கட்டுப் பாட்டு ஆணை. எம்.சி.ஒ.க்கு தமிழில் வழங்கப்பட்ட அழகான மொழிப்பெயர்ப்பு. இந்த பேரு உருவாகறதுக்கு முன்னாடி ஒரு 5 மாசம்னு நெனைக்கிறேன், ஐயா ஒரே பிஸி. ஒரு கட்டம் அடடா நாம வேற லெவெலுக்குப் போக போறோம்னு கனவெல்லாம் கண்டேன். அதே சமயத்துல ஒரு பயமும் அப்போ அப்போ வரும். வாழ்க்கை ரொம்ப ஸ்பீடா போக்குதே எங்கேயாவது கடவுள் ப்ரேக் வச்சிருவாரோன்னு. சில நேரத்துல, டைமே இல்லன்னு பொலம்பிருக்கேன். அப்போல்லாம், எனக்கே நான் சொல்லிக்கிறது. "ஸ்ரீ குமரா, இப்படில்லாம் பொலம்பாதே, பிஸியா இருக்குறதும் நல்லதுதான். கடவுள் எல்லாம் யோசிச்சுதான் செய்வாரு. அதுவும் நீ எப்படி யோசிக்கிறீயோ அப்படியே உன் வாழ்க்கையிலும் நடந்துகிட்டு இருக்கு. சோ, ரொம்ப அலட்டிக்காதே சரியா".. ஆனா கடவுள் வேற லெவெல். நான் நெனச்சே மாதிரியே வச்சாறப் பாருங்க ஒரு ஸ்பீட் பிரேக்கு!

எம்.சி.ஒ.ன்னு சொல்றதுக்கு முன்னாடியே நான் பாலேக் கம்போங் பன்னிட்டேன். வீட்ல விசேஷங்க. அப்போ போய் மாட்டனவன்தான் ஒரு ஒன்றரை மாசத்துக்கு கே.எல். பக்கமே திரும்ப முடியாம போச்சு. சரி பல மாசமா அம்மா வீட்டுக்குப் போக முடியாம வருத்தப் பட்டிருக்கோமே. கடவுளே நமக்கு அந்த வாய்ப்பை அமைச்சுக் கொடுத்திருக்கார்ன்னு மனச சாந்தப் படுத்திக்கிட்டேன். ஆனா மொத 2 வாரம் நல்லாதான் போனுச்சு.  அதுக்கப்போறோம் வருமானத்த பத்திய கவல வர ஆரம்பிச்சது. ஒரு ஆளா எல்ல செலவையும் பார்த்து கிட்டு இருக்கோம், இப்போ ஒரு பெரிய தொகை அடிப்படுமே என்ன பன்னபோறோம்னு குழம்ப ஆரம்பிச்சேன். இத வெளியவும் சொல்ல முடியாது. சொல்ல வேண்டிய எடுத்துல சொன்னாலும் பலனில்ல. சோ நாமதான் நமக்கான வழியைத் தேடிக்கணும், நமக்கான வலியை தேத்திக்கணும். இந்த சமயத்துலதான் நாம யாரு. நமக்காக யாருன்னு புரிய ஆரம்பிச்சது. 

என்னதான் சம்பாத்தியத்த பத்தி கவலை இருந்தாலும், வீட்ல இருந்த ஒவ்வொரு நொடியும் சொர்க்கமா இருந்தது. அத கே.எல்.க்கு திரும்பன்னதுக்கு அப்புறம் தான் உணர்ந்தேன். ஆம்புலைங்க லேசுல அழமாட்டாங்கன்னு யாருங்க சொன்னா. நாங்க அழறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் "பாசம்". பாசம் எங்க தொலைந்து போகிறதோ, பாசம் எப்போது தூரம் போகிறதோ அங்க நாங்க ஒடைஞ்சு போறோம். அழறது எங்களுக்கு தன்மான குறைச்சல்தான். ஆனா அதையும் மீறி வருதுன்னா அந்த கண்ணீருக்கு மதிப்பு இருக்கு. அப்படிப்பட்ட கண்ணீர் துளிகள் ரொம்ப காலத்துக்கு அப்புறம் என் கண்களில் இடைவிடாமல் வழிந்தன. அப்படி என்னாச்சுன்னு தோனாலும். நான் சொல்லும் காரணம் சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். சிலருக்கு கேவலமாக இருக்கலாம். ஆனால், என் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான் அதன் அர்த்தம் புரியும். 

அந்த ஒன்றரை மாசம் வீட்டில் இருந்த தருணங்களை விவரிக்கிறேன் கேளுங்கள. "மணியாச்சு, வந்து சாப்பிடுய்யா" இப்படிதான் எங்கம்மா என்னை எழுப்புவாங்க. குளிச்சுட்டு, வந்தா பசியாறை மேச மேலே ரெடியா இருக்கும். தூங்கிக்கிட்டு இருக்குற அக்கா பிள்ளைங்கள்ல ஒரு அதட்டல் போட்டு (தாய்மாமா கெத்த காட்டணும்ல) அந்த பசியாறைய சாப்பிட ஆரம்பிப்பேன். அப்பா வருவாரு, டிவிய தட்டிட்டு அவரோட ஃபோபா (ஓப்ஸ் அதுல்ல ஒக்காந்துதான் நான் பசியாறுவேன்) அப்போ அப்பா பக்கத்து ஃபோபால ஒக்காந்துப்பாரு. ஜிம்மி(செல்லக்குட்டி) வாசல்ல நின்னுக் கிட்டு நான் என்ன சாப்டேருன்னு பார்த்துக்கிட்டு இருக்கும். உடனே அப்பா ஒரு ரொட்டி துண்டுல காய பட்டர் பூசி அதுக்கு ஊட்டுவாரு (அப்பா ஊட்டனாதான் ஜிம்மி சாப்பிடும். தூக்கிப் போட்டோம்னு வச்சுக்கோங்க சாப்டாம பிகு பண்ணும். அப்படி ஒரு சொகுசு ஐயாவுக்கு வீட்ல)  அதுக்கப்புறம் அம்மா சத்தம் போட்டுக் கிட்டே வருவாங்க. அதுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்கே. யேய் ஜிம்மி அங்க போய் சாப்டுன்னு அதட்டுவாங்க. ஆனாலும் அம்மா-ன்னா ஜிம்மிக்கு கொஞ்சம் பயம்தான். உடனே துண்ட காணும் துணிய காணும்னு ஓடிடும். அவுங்களுக்கு மட்டும்தான் பயப்படும்.வேஷக்காரன். 

அப்புறம் என்னங்க, லஞ்ச் டைம். அம்மா என்கிட்ட கேக்குற கேள்வி "என்ன சாம்டணும் போல இருக்கு".. நான் சொல்றது "எதையாவது செய்யுங்கம்மா". அப்புறம் எதையாவது செய்றேன்னு எல்லாத்தையும் செஞ்சி வச்சிருவாங்க. எப்போதும் அப்பா அம்மா ரெண்டு பேருமே எதிர்ப்பார்க்கறது அவுங்க கூட சேர்ந்து சாப்படணும்தான். ஆர்வமா படம் பார்த்துக்கிட்டு இருப்பேன், இல்லை எதாவது வேலை செஞ்சுக்கிட்டு இருப்பேன். அப்போ வந்து சாப்ட வங்கா சாப்ட வாங்கன்னு நச்சரிப்பாங்க. அப்போ அப்படிதான் தோணும். வரேன்மான்னு சொல்லிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சுதான் போவேன். சாப்பாடெல்லாம் ரெடியா இருக்கும். எல்லாத்தையும் மங்குல போட்டுட்டு உக்காருவேன். அம்மாவோடு கண்ணோ என் மங்குலேதான் இருக்கும். எவ்ளோ போட்டுருக்கேன், என்னென்ன போட்டுருக்கேன் குருகுருன்னு பாப்பாங்க. "ஏன் கொஞ்சோண்டு போட்டிருக்க? ஏன் மீன் போடல்ல, ஏன் இத போடல, அட போடலன்னு கேள்வி மேலே கேள்வி கேப்பாங்க.. வேற வழி, அதுக்கப்புறம் அவங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் போட்டு வயிறு முட்ட சாப்பிடுவேன். அப்போதான் அவுங்களுக்கு நிம்மதியா இருக்கும். அப்படி அவங்கள திருப்தி படுத்தி திருப்தி படுத்து கடைசிலே நான் கும்முனு ஆயிட்டேன். அம்மா கம்முனு ஆயிட்டாங்க. 

கொஞ்சநேரம் ஒக்காந்து கத அடிப்போம். அப்பப்போ இந்த வீடியோ செய்யணும், அந்த வீடியோ செய்யணும்னு நான் ரூம்முக்கு போயிருவேன். கரேக்டா மணி நாலாச்சுன்னா, "குணாஷாலினி கோப்பி கலக்கு, ஷாலினி நீ டீ கலக்கு".. நான்தான். அக்கா பிள்ளைங்களுக்கு வேலை விடுவேன். சும்மா ஒரு ஜாலிக்கு. ஹாஹா. என்னிக்காவது தோணுச்சுன்னா நானே போய் பலகாரம் செய்வேன். இல்லை அம்மாவே பலகாரம் செஞ்சிருவாங்க. ஆனா டேய்லி டீ டைம்கு எதாவது ஸ்பேஷலா இருக்கும். பத்தாதுக்கு எங்க அக்காங்க வேற அது இதுன்னு வித விதமா பலகாரம் செஞ்சு வீட்டுக்கு எடுத்துட்டு வருவாங்க. எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா. எல்லோரும் ஒன்னா நல்லா கத அடிச்சுக்கிட்டு, கிண்டல் பண்ணிக்கிட்டு ஜாலியா இருப்போம். மாசத்துக்கு ஒரு தடவை வந்து போற எனக்கு, மாசம் முழுக்க அப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சது. ஒரு மாசம்தானே நல்லா ஜாலியா இருப்போம்னு, ஜாலியாவே இருந்தோம். எந்த கவலையும் இல்லாம, எந்த பிரச்னையைப் பத்தியும் பேசாம. ஆனா அப்பப்போ எனக்கு மட்டும் மனசுக்குள்ல ஒரு கலக்கம் இருந்து கிட்டே இருந்தது. ஐய்யய்யோ ஒன்றரை மாசம் வருமானத்த எப்படி ஈடுக்கட்ட போறோம். என்ன பண்றதுன்னு யோச்சிச்சுக் கிட்டே இருப்பேன். ஆனா வீட்ல யாருக்கிட்டயும் இத சொன்னது இல்ல. எல்லோருக்கும் நான் வீட்ல ரொம்ப நாள் இருந்ததுல்ல அவ்ளோ சந்தோஷம். அதை கெடுக்க வேண்டாமேன்னு பேசாமலே இருந்துட்டேன். பொதுவா, வேலை விஷயத்தைப் பத்தி வீட்ல பேசறது குறைவுதான்.

ஹ்ம்ம்.. எங்கம்மா இருக்காங்களே.. ஒரு இடத்துல இருக்க மாட்டாங்க. டீ டைம்க்கு அப்புறம் குளிச்சுட்டு டின்னருக்கு ரெடி பண்ண போயிருவாங்க. இப்படிதாங்க நான் அங்க இருந்த ஒவ்வொரு நாளும் அம்மா ராட்டினம் மாதிரி சுத்திக்கிட்டே இருப்பாங்க. நானும் சொல்லுவேன். ரெஸ்ட் பண்ணுங்கம்மா. ஏன் அது இதுன்னு செஞ்சுக்கிட்டே இருக்கீங்கன்னு. ஹ்ம்ஹ்ம் கேக்கமாட்டாங்க. பையனுக்கு விதவிதமா சமைச்சுக் கொடுக்கணுமாம். ராத்திரி சாப்பாடு முடிஞ்சோனே எனக்கு வேலை வந்துரும். அத செய்ய ஆரம்பிச்சுருவேன். பொதுவாவே வீட்ல இருந்த சமயத்துல வீட்ல இருக்கிறவங்க கூட டைம் ஸ்பேண்ட் பண்ணணும்னு ராத்திரிதான் வேலை செய்ய ஆரம்பிப்பேன். ஆனா, இந்த அம்மா தூங்கறதுக்கு முன்னாடி கூட எனக்கு கோப்பி கலக்கி வச்சிட்டுதான் போய் தூங்குவாங்க. சில சமயம் ராத்திரி வேலை செஞ்சுகிட்டு இருக்கறப்போ எனக்குத் தோணும், கோப்பி குடிச்சா நல்லா இருக்கும்லன்னு, நெனச்ச அடுத்த செகண்டே காப்பி வரும். எங்கம்மா அந்த மாதிரி. அப்படி காப்பி வரலன்னா வச்சிக்கோங்களேன்.."குணாஷாலினி..." 

நல்ல ஜாலியான நாட்கள். அக்கா எல்லாம் வீட்ல இருந்தப்போ, பழைய கதைகள் பேசனது, புதுசு புதுசா சமையல் ட்ராய் பண்ணியது. சிலது சொதப்பல் ஆனது, அதை வச்சு கலாய்ச்சது. சொல்ல மறந்துட்டே ஷாலினி டோனட் செய்யுறேன்னு கல்லு மாதிரி ஒரு கோக்கோய் செஞ்சு, கடைசிலே யாரும் அதை சாப்பிட முடியாமையே போச்சு. மேடம் யீசுக்குப் பதிலா மேக்கிங் பவுடர் போட்டுட்டாங்க.. ஹாஹா. எங்க சின்னக்கா லீவுள்ல இருக்கறப்பெல்லாம் விதவிதமா கேக் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. லக்சா என்ன, கோழி கஞ்சி என்ன, பீட்ஸா என்ன. வேற லெவெல். அப்புறம் எங்க வீட்ல மைசூர் பாக் ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க. எங்க மூனாவது அக்கா. எப்பெல்லாம் தோனுதோ அப்பெல்லாம் மைசூர் பார்க் ரெடி. கடையில் கூட அவ்ளோ டேஸ்டா கிடைக்காது. அப்படி ஒரு வாசம், அப்படி ஒரு பக்குவம். பெரியக்கா கொஞ்சம் பிஸி, தூரம் வேற இருக்குறதால வீட்டுக்கு வர முடியாம போச்சு. எம்.சி.ஒ தளர்வுக்கு பிறகு வீட்டுக்கு வரப்போ உப்புக் கோழி செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க. என்னோட ஃபேவரட். நாலாவது அக்காவும், சிஎம்சிஒ சமையத்துலதான் வந்தாங்க. அதுக்கப்புறம் வீட்ல டேய்லி தினுசு தினுசா சாப்பாடுதான். சும்மா சொல்லக் கூடாது. எம்.சி.ஓ ஒரு சில நாட்களில் பண்டிகை மாதிரிதான் இருந்துச்சு. அஞ்சாவது அக்காவ பத்தி சொல்ல மறந்துட்டேன். அவுங்க வீட்டுக்கு வரப்போல்லாம் டயடாவேதான் இருந்தாங்க..அதனால ஒன்னும் செய்யல்ல.. ஹாஹா.. 

அக்கா எல்லாம் சி.எம்.சி.ஓ சமயத்துலதான் வந்தாங்க. ஆனா, அதுக்கு முன்னாடி ஒன்றரை மாசம், நானு, அம்மா, அப்பா, அக்கா பிள்ளைங்க மட்டும்தான் வீட்ல இருந்தோம். அக்காங்க கூடெல்லாம் வாட்ஸேப் கால்லதான் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ அது ஜாலியா இருந்துச்சு. ஏன்னா அதுக்கு முன்னாடி நாங்க அப்படி கால் பண்ணி பேசனது இல்ல. வித்தியாசமா இருந்தாலும், அதுவும் நல்லாதான் இருந்துச்சு. இப்படியே இருந்திடலாமான்னு தோனுச்சு. ஆனா அது சாத்தியம் இல்லைங்க. நான் வேலைக்கு போய்தான் ஆகணும். வேலைக்கு போனும்னு துடிச்ச அப்பா அம்மாவை நான்தான் நிறுத்தி வச்சிருக்கேன். வருமானம் போதுமானதா இருக்குங்குற நம்பிக்கையில்தான். ஆனா அங்க அடி விழும்னு நெனைச்சாலே ஆட்டம் கிளம்புது. 

இந்த ஒரு கவலை மட்டும் இல்லாதிருந்தால். நான் எம்.சி.ஓ.வை இன்னும் சந்தோஷமா கழிச்சிருப்பேன். ஆனா முடில. கவலை அழுத்தம் ஆனது. கண்டிப்பா போய்தான் ஆகணும்னு முடிவு செஞ்சேன். அனுமதி கடிதமும் கிடைச்சது. ஆனா வீட்லேருந்து கிளம்ப எனக்கு மனசே இல்ல. என்னை வழி அனுப்பு வைக்க அம்மாக்கும் மனசு இல்ல. என்னென்னம்மோ காரணம் சொல்லி, நாளைக்கு போ நாளைக்கு போன்னு சொல்லி நான் போறத தள்ளி போட்டுக்கிட்டே இருந்தாங்க.  எனக்கும் போக தோனல்ல. அதுதான் உண்மை. ஆனா கிளம்பு கிளம்புன்னு புத்தி சொன்னுச்சு. போயே அகணும்னு, அரை மனசோடு, துணியெல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சேன். ஓவ்வொரு பொருளையும் எடுத்து வைக்கிறப்போ மனசு எவ்ளோ பாரமா இருந்துச்சு தெரியுமா. "போணுமா? போணுமா"ன்னு மனசு கேட்டுக்கிட்டே இருந்தது. அப்படி இப்படின்னு திங்க்ஸெல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்பிட்டேன். அப்பையும் நெறைய ஜாமன்ன வீட்லேயே விட்டுட்டு வந்துட்டேன். அங்கதான் மனசே இல்லையே மூளைமட்டும் எப்படி வேலை செய்யும். போகும் வழியெல்லாம் ஒரே குழப்பம்தான். அம்மா முகம், அப்பா முகம், அக்காங்க முகம், ஜிம்மியோடு முகம்னு வந்து வந்து போனுச்சு. அது எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா?.

அப்படி இப்படின்னு பூச்சோங் வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு முன் காடியே பார்க் பண்ணிட்டு எறங்குறேன். அந்த வீட்டைப் பார்த்தோனே என்னை அறியாமலே கண்ணீர் சுரக்க ஆரம்பிச்சது.. அப்படியே இதயம் கனமாயி கீழ எறங்கிட்ட மாதிரி இருந்துச்சு. அதை சுமந்து கொண்டு, என்னோட குட்டி அறைக்குள் நுழைஞ்சேன். அப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு, இந்த குட்டி அறைய பாக்கறப்போ எனக்கு இன்னும் அழுகை தாங்க முடில. தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சேன். அடக்கணும்தான் முயற்சி பண்ணேன். ஆனா முடில.வீட்ல இருக்கறப்போ வேலை டென்ஷன்ல, சரியா பேசாம இருந்திருக்கேன். வருமானம் பத்திய கவலையிலே கடுப்பா பேசிருக்கேன். ஆனா இந்த நாலு சுவர் பெட்டிக்குள்ள இருக்கறப்போதான், எல்லாத்தையும் விட குடும்பத்தோடு இருக்குற நேரம்தம் பெருசுன்னு பட்டுச்சு. கிடைச்ச வாய்ப்ப ஒழுங்க பயன்படுத்தலையோன்னு தோனுச்சு. கொஞ்சம் குற்ற உணர்ச்சியாவும் இருந்துச்சு. அதுதான் அந்த அழுகைக்கான காரணம். வேலை செய்யறப்போ அம்மா பேசனா, கொஞ்சம் பேசமா இருங்கம்மான்னு சொல்லிருக்கேன். ஆனா அந்த அறையும் ஆளில்லாத சூழலும், அம்மாவின் குரலுக்கு என்னை ஏங்க வைத்தது. வலித்தது.

இது என்ன ஓவெரா இருக்குன்னு சிலருக்கு தோனலாம்.  வெளியூர்ல எத்தனையோ பேரு வேலை செய்யுறாங்க. அவுங்க இல்லையான்னு கேக்கலாம். இருக்கலாம். அந்த மாதிரி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லைங்க. என்னை ரொம்ப பொத்தி பொத்தி வளர்த்துட்டாங்களோ என்னவோ. நான் ஏன் இப்படி இருக்கிறேன்னு எனக்கே சில சமயம் தோனும். ஆனா அந்த முதல் நாள் நான் அனுபவிச்ச வலி வேறமாதிரி இருந்தது. இந்த உலகமே நம்மை தனித்து விட்டது போல் இருந்தது. திரைப்படத்தில் மட்டுமே நான் பார்த்த பிரிவின் ஆழமான வலியை அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். எதை பார்த்தாலும், எங்கு சென்றாலும், வீட்டின் ஞாபகம் வந்துகிட்டே இருந்தது. அம்மாவின் குரலை கேக்கணும் போல இருந்தது. அம்மாவின் மடியில் சாயணும் போல இருந்தது. நம்ப மாட்டீங்க, தலையணையை அம்மாவின் மடி மாதிரி செஞ்சு அதன் மீது தலை சாய்த்து கண்களை மூடினேன். ஆனால் மூடிய கண்களை மீறி கண்ணீர் கசிந்து விழுந்தது. அடக்க முடியாத அழுகை. அழுது அழுது சலி பிடிச்சுகிச்சு.  அப்போதான் அம்ம ஃபோன் பண்ணுவாங்களா?. நான் ரிஜெக்ட பண்ணேன். ஆனா விடாம ஃபோன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. வேற வழியில்லாம எடுத்தேன்.

"ஆ.. சொல்லுங்கம்மா"... "ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு" அம்மா கேட்ட முதல் கேள்வி.."ரூம் சுத்த பண்ணேம்மா, ஒரே தூசி. அதான் சலி புடிச்சுக்கிச்சு" ன்னு அழுகையை அடக்கிக் கிட்டு எப்படியோ சமாளிச்சிட்டேன். ஆனா என் குரல்ல இருந்த நடக்கத்த அவுங்க கண்டுப் புடிச்சுட்டாங்க. உடனே அக்காவுக்கு ஃபோன் பண்ணி எனக்கு வீடியோ கால் பண்ண சொல்லிருக்காங்க. கால் வந்தது. வழியில்லாம நானும் எடுத்தேன். ஆனா, அம்மா முகத்த பார்த்தோனே அழுக வந்திருச்சு. டக்குன்னு கட் பண்ணிட்டேன். அவுங்க ஏதோ என்னமோன்னு பயந்துட்டாங்க. அதுக்கப்புறம் அக்காக்கு மேசெஜ் பண்ணி வீட்டு ஞாபகமாக இருக்கு. அதான் கவலையா இருக்கு, வேற ஒன்னும் இல்லைன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்..ம்ம்ம் ஒரு சில சமயங்களில் நிகழ்காலத்தை மறந்து எதிர்காலத்தை பத்தியும், இறந்த காலத்தை பத்தியும் அதிகம் யோசிப்பதால்தான் நமக்குள் இவ்வளவு சிக்கல்கள். யோச்சிக்காமலும் இருக்க முடியறது இல்ல. ஒரு நாள் முழுக்க அழுது அழுது தலை பாரமா ஆச்சு. கண்கள் வீங்கி போச்சு. அப்போதான் எனக்கு தோனுச்சு, எங்க அஞ்சு அக்காவும் கல்யாணம் பண்ணி போறப்போ எப்படி ஃபீல் பண்ணிருப்பாங்கன்னு. அதுவும் அது சமூகம் அமைத்த நிரந்தர மாற்றம். 

அன்னிக்கு நானும் மாமியார் வீட்டுக்கு வந்த மருமகள் போலதான் கிடந்தேன். எதையாவது சொல்லி மறுபடியும் வீட்டுக்கு போயிறலாம்னு தோனுச்சு. ஆனால் அது சாத்தியமில்லையே. வீட்ல இருந்த போதே முழு கவனத்தையும் வீட்ல வச்சிருக்கணும். வேலைய பத்தி யோசிக்காம இருந்திருக்கணும். அம்மா அப்பா கூட நெறைய பேசிருக்கணும். அத செய்யாம விட்டது என் தவறுதான். ஆனால் அந்த தவறுக்கான பாடம் மனச ரொம்பவே பாதிச்சது. இனிமேலாவது, வீட்ல இருக்கறப்போ வீட்ல உள்ளவங்க கூடதான் நேரத்தை ஒதுக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். இந்த உலகத்துல நமக்காக இருக்குற உண்மையான உறவுகளில், குடும்பம்தான் முதல்ல இருக்கு. நாம் பொருளியல் வாழ்க்கையில் ஊறி போய்ட்டோம். ஆனா வயசான நம்ப அம்மா அப்பாவுக்கு, எஞ்சிய வாழ்க்கையே நாமதான். அத கொடுக்க முடியாதப்போ எல்லோருக்கும் வலிதானே மிச்சம். 

எம்.சி.ஓ காலக்கட்டம் யார் யாருக்கோ என்னென்னமோ சொல்லி கொடுத்திருக்கு. ஆனா எனக்கு இதுநாள் வரைக்கும் நான் எதை தொலைச்சிருக்கேன் என்கிறதை சொல்லி கொடுத்திருக்கு. வேலை பிஸின்னு சொல்லி, வீட்டுக்கு சரியா கூட ஃபோன் பண்ணி பேசனது இல்ல. இப்போ டேய்லி வீடியோ கால். அப்படியே கால் பண்ண மறந்துட்டா, என்னம்மோ மிஸ் பண்ண மாதிரியே இருக்கும். இதுக்கு முன்னாடி, குடும்பம்தான் எனக்கு பலமா இருந்தது. சோர்ந்து போகும் போதும், கவலையா இருந்த போதும், அம்மா அக்கான்னு எல்லோரும் ஆறுதல் சொல்லிருக்காங்க. நெறைய நம்பிக்கை கொடுத்திருக்காங்க. ஆனா இன்னிக்கு, குடும்பம் என்ற சொல், அம்மா என்ற உணர்வு என்னை பலவீனமா ஆக்கிக்கிட்டு இருக்கிறது. ஆனால் இந்த பலவீனம் எனக்குப் பிடிச்சிருக்கு. 

இதுவரைக்கும், வீட்டில் குடும்பத்தோடு இருக்கிற நேரத்தை கடவுள் அமைச்சுக் கொடுத்தாரு. அத நாம சரியா பயன்படுத்தினோமான்னு தெரில. இப்போ வழக்கநிலைக்கு திரும்ப போறோம் அதையும் எப்படி பயன்படுத்திக்க போறோம்னு தெரில. ஆனா ஒன்னும் மட்டும் தெரிது. கடவுள் எல்லோருக்கும் அவரவருக்கு ஏத்த மாதிரி அழகான பயணத்தை அமைச்சுக் கொடுத்திருக்காரு. குறைசொல்லாம அந்த பயணத்தோடு நாம பயணிக்கும் போதுதான் வாழ்க்கை ஸ்மூத்தா போற மாதிரி தோனும். இல்ல கடவுளே நமக்கு சதிதிட்டம் தீட்டன மாதிரிதான் தோனும். எல்லாமே நம்ப கையிலதாங்க இருக்கு. இதுக்கு முன் வாழ்ந்ததையும், இப்போ வாழ்ந்திருக்கிறதையும், நாளை வாழ போகிற வாழ்க்கையையும் கடவுள் அமைத்துக் கொடுத்தாலும், நாம சரியா பயன்படுத்தலன்னா அவ்வளவுதான். பார்வையற்ற மாலுமி கையில் நடுக்கடலில் சிக்கிய கப்பலை போன்றதுதான். இவ்ளோ டீப்பா என் மனசு பேசினாலும். அறிவு என்ன சொல்லது தெரியுமா?. இதுகெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டேங்குது.. அப்போ வாழ்க்கை இப்படியேதான் போகுமா???


-எழுத்து-
ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி