முகமூடி முக்கியம் பிகிலு!
இனிக்க இனிக்க பேசும் திறமை இல்லாதவனே நேர்மையானவன். இவன் கோபக்காரன், சண்டைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என பெயரிடப்படுகிறான். ஆனால் இவனோ மயிரே போனாலும் மடுவை நகர்த்தியாக வேண்டும் என துடியாய் துடிக்கிறான். பைத்தியக்காரன். ஆனாவுனா நான் வெளிப்படையாக இருக்கிறேன் நேர்மையாக இருக்கிறேன் என மார்த்தட்டிக் கொள்கிறான் அசட்டுத்தனமாக. பாவம்..இவன் இருப்பது பொய்மையும் முள்ளமாரிதானமும் நிறைந்த உலகம் என்பது அவனுக்குத் தெரியவில்லை போலும்..
இந்த உலகம் காலத்திற்கு ஏற்றாற்போல்தான் இயங்குகிறது. இவன்தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருக்கிறான். கோபமும் தாபமும் இருந்தாலும், ஆளைப் பார்த்தால் முப்பத்திரண்டு பல்லும் தெரிவது போல் சிரித்தாக வேண்டும். நெய் உருகி வழிவதுப்போல வார்த்தைகளை உருக்கி வழியவைக்கணும். அடடா இவன் அல்லவா உன்னதமானவன், பாசத்தின் உச்சம் என நம்ப வைக்கணும். அதற்கு பல யுக்திகளும் உண்டு. ஆனால் அதெல்லாம் ஒன்னுக்கும் உதவாத நேர்மையைக் கட்டிக் கொண்டும் அழுவும் இவனுக்கு தெரியாது.
போக விட்டு புறணிப் பேசலாம். பேசும் போது வார்த்தைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை. விட்டா வார்த்தைகளாலே குத்தி கொலை செய்யலாம். மதிக்கவே வேணாங்க. எவ்வளவுக்கு எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பேசலாம். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படியே காலில் விழுந்திடணும். ஒரு துளி கோபத்தைக் கூட காட்டிடக் கூடாது. ஆனால் இந்த நம்ம ஆளுக்கு எங்க இருக்கு. கோபம் வந்தால் முகத்துக்கு நேரே வார்த்தையைப் பறக்க விடறது. கடைசியில் என்ன மிச்சம். கேட்டால் நான் நானாக வாழ்கிறேன் என்கிறான். ம்ம்ம் இவனை என்ன செய்யலாம்.
மனுஷனுக்கு உணர்வுகளை எதற்கு கடவுள் கொடுத்திருக்காரு. வாழும் போது நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதற்கு. கோபம், சோகம், சந்தோஷம் என எந்த உணர்வாக இருந்தாலும் அதை வெளிக் காட்டும்போதுதான் அந்த உணர்வு அர்த்தம் பெறுகிறது. எல்லா உணர்வுகளையும் கலட்டி வைத்து விட்டு வெறும் வணிக உணர்வை மட்டும் மனதில் தேக்கி வைத்திருந்தால் நாம் மட்டுமல்ல வாழ்க்கையும் போலியாகத்தான் இருக்கும். மனிதனுக்கு பொருளாதாரம் முக்கியம்தான். புகழ்கொண்ட வாழ்க்கை அவசியமானதுதான். ஆனால் அதற்காக உணர்வுகளைத் தொலைத்து விட்டு வெறும் போலி வாழ்க்கையை வாழ்வதில் என்ன பயன். சத்தியமா அது தெரியாமதான் அவன் திரியுறான்.
"எனக்கு நடிக்க தெரியாதுங்க" டே டேய் போதும்டா. உன்னை யாரு நடிக்க சொன்னா, கொஞ்சம் அனுசரிச்சுப் போ. மத்தவங்க இல்ல. எதையாவது சாதிக்கணும்னா அப்படி இப்படின்னு கொஞ்டம் எஜஸ்ட் பண்ணிதான் போகணும். இதை அவன் கேப்பான்னு நெனைக்கிறீங்க. ம்ம்ம். மாட்டான். நான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னுதான் இருப்பான். ஆனா ஒன்னு அவன் அவனா இருக்குறான். எல்லாராலும் அப்படி இருக்க முடியாது. ஒரு தடவ முகமூடிய மாட்டணும் காலம் முழுக்க அத பாதுகாத்தாகணும்.. முக மூடி முக்கியம் பிகிலு. கொஞ்சம் கிளிஞ்சாலும் அம்புட்டுதேன்.
என்னா போலி முகங்களுக்கு இப்போ மவுசு அப்படி. ஆமா கொஞ்சம் நஞ்சமா செலவு பன்றாங்க. போட்ட காசுக்கு எதையாவது பாக்கணும்ல. அவர்களை நம்புவர்கள் இவனை நம்புவது இல்லை. அது அவர்கள் விதி. என்ன செய்வது. ஆனால் இதெல்லாம் பார்க்கும்போது இவனுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். சிரிப்பாகத்தான் இருக்கும்.. ஏன்னா இவனுக்குதான் எல்லா கதையும் அத்துப்படியாச்சே.. இனியும் இவன் திருந்தவில்லை என்றால்...
இப்படிக்கு
எஸ்கே!
அருமையான கருத்து....
ReplyDeleteநன்றி
Delete