யாருங்க இந்த சரஸ்?


அர்த்தமுள்ள இந்து மதம்னு சொல்றோம் ஆனா எத்தனை பேர் அர்த்தம் புரிஞ்சு நடந்துக்குறோம். ஆனா எல்லாத்துக்கும் அர்த்தம் தெரிஞ்சக்கறதும் கஷ்டம்தான். ஒரு ஆயுட்காலம் பத்தாது. அவ்ளோ இருக்கு! இந்துங்குற பேருக்கு பின்னாடியே பெரிய வரலாறு இருக்குங்க. சரி, அத அப்புறம் பாக்கலாம். இப்போ டைட்டல்க்கு வருவோம். யார் இந்த சரஸ்வதி?? 

இந்து மதம் என்றழைக்கபடுற நம்பிக்கையில் சரஸ்வதி முக்கிய கடவுளர்களின் ஒருவர். உலகத்தில் உள்ள எல்லா தொழில்களையும் மூன்றாக வகைப்படுத்தி படைத்தல், காத்தல், அழித்தல்னு சொல்லி, அதற்கு மூன்று கடவுள்களையும் நியமித்திருக்கிறோம். ப்ரம்மா, விஷ்ணு, சிவன்னு. இந்த முத்தொழிலும் செய்ய இவர்களுக்குத் தேவையான சக்திகள் முறையே, ஞானம், செல்வம், வீரம்ன்னு சொல்லி, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதின்னு அவர்களுக்குத் துணைவியர்களாகவும் கூறுகிறோம். படைப்புத் தொழில் செய்றவருக்கு ஞானம் அவசியம். அதானாலதான் பிரம்மாவுக்கு ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி மனைவியா இருக்குறாங்க!

பிரம்மா சரஸ்வதி

கலை, கல்வி என அறிவு சார்ந்த அனைத்துக்கும் தெய்வமாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி என்ற சொல், சரஸ் வதி என்ற இரு சமஸ்கிருத் சொற்களின் இணைப்பு. சரஸ் என்றால் ஆற்று  ஓட்ட ஒழுக்கம் என்ற பொருள். தெளிந்த நீரோடைக்கு ஏற்ப நகரும் ஞானத்தை குறிப்பதாக இதன் பொருள் அமைகிறது. இதை தவிர கலைக்குத் தெய்வமாக கலைமகள், பேச்சுக்குத் தெய்வமாக நாமகள், இசைக்குத் தெய்வமாக வீணாபாணி, இப்படி பல பெயர்களில் அன்னை சரஸ்வதியைக் கூப்டுறோம். சரஸ்வதி தேவியை முதல் முறையாக ரிக் வேதத்தில் குறிப்பிட்டிருக்காங்க. பல கதைகளும், தோற்றங்களும், இடத்திற்குத் தகுந்தாற்படியும், இனத்திற்குத் தோதுவாகவும கூறப்பட்டாலும், பொதுவாக தெரிந்தது, ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி, வெண்ணிற ஆடையிலும், வெந்தாமரையிலும், கையில் வீணையுடனும், அட்சமாலை, ஏட்டுச்சுவடிகளுடனும் காணப்படுகிறார். கல்வி நிலையான செல்வம் என்பதால் சில ஓவியங்களில் கல் அல்லது பாறை மீது உட்காந்திருப்பார். இன்னும் சில ஓவியங்களில், அவரின் வாகனமான அன்னப்பறவையின் மீது அமர்ந்திருக்கிறார்.  



சரி. சரஸ்வதி இந்துக்களுக்கு மட்டும்தான் கடவுளா??. அதான் இல்லை. அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம். கலைமகள் சமயங் கடந்த தெய்வம் என குறிப்பிடுகிறார் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். பிற மதங்களிலும், கலாச்சாரங்களிலும் சரஸ்வதி வேறு ரூபத்திலும், வேறு பெயர்களிலும் வணங்கப்படுகிறார் அல்லது போற்றப்படுகிறார். தர்ம மதங்களான, பௌதம், சமணம், சரதுசம் ஆகிய மதங்களிலும் போற்றப்படுகிறார். சரதுசத்தில் அரத்வி சுர அகனிதா என்ற பெயரில் குறிப்பிடபடுகிறார். அரத்வி சுர என்ற சொல்லைத் திருப்பிப் போட்டுப் பார்த்தால் சுர அரத்வி, சுரரத்வி, சுரஸ்வதி, சரஸ்வதி...ம்ம்ம் ஏன் மாற்றம் கண்டிருக்கக் கூடாது. ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான்.  


சரதுசத்தில் அரத்வி சுர அகனிதா

இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில், அரபு நாட்டில் முப்பெருந்தேவியர் வழிப்பாடு இருந்திருக்கிறது. சரஸ்வதி தேவியை ஒத்த தேவி சிலை ஒன்றும் அகழ்வாராய்ச்சில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

அரபு நாட்டில் கண்டெடுக்கப்பட்ட சிலை

முப்பெருந்தேவியர்: அல்-லத், அல்-உஷா, அல்-மானத் 


இப்படி அறிவுக்கு அதிபதியான சரஸ்வதி தேவி, பல தேசங்களில் வழிப்படப்பட்டிருக்கிறார். இந்து மத தாக்கம் பரவியிருக்கும் தென்கிழக்காசிய நாடுகளில் இன்னமும் சரஸ்வதி தேவி முக்கியத் தெயவங்களில் ஒருவராக திகழ்கிறார். இந்தோனேசியாவிலும், இந்து தீவான பாலியிலும், அந்த தேசத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற உருவத்திலும், ஆடை வடிவமைபிலும் காட்சித்தருகிறார். கையில் வீணைக்குப் பதிலாக அந்த நாட்டு நரம்பு இசைக் கருவியைக் கொண்டிருக்கிறார். அதே போல் மியன்மாரில் துராததி அல்லது தாயேதடி என்ற பெயரில் வழிப்படப்படுகிற சரஸ்வதி தேவி, கையில் புத்தகங்களுடன் அன்னம் மேல் அமர்ந்த வண்ணமுமாக கட்சித் தருகிறார். கம்போடியாவில், பிரம்மாவுடன் கட்சித்தரும் சரஸ்வதி தேவி, வாகிஸ்வரி, பாரதி என்றும் அழைப்படுகிறார். தாய்லாந்தில் பிரம்மாவின் மனைவியாக பூஜிக்கப்படும் தேவியின் பெயர் சரஸ்வதியிலிருந்து மருவி சுரட்சவாடியாக மாறியிருக்கிறது. மயிலோடு இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலை தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

மியன்மார்

இந்தோனேசியா


திபேத்தில், இசை தெய்வமாக வர்ணிக்கப்படுகிற சரஸ்வதி தேவி, இசை பெண் தெய்வம் என்ற பொருளோடு, யங் சென் மா என்று அழைக்கப்படுகிறார்.  சீனாவின் வழியாக பரவிய இந்து மதத் தாக்கத்தால், ஜப்பானில் சரஸ்வதி தேவி வழிப்பாடு தோன்றியுள்ளது. பென்சைதீன் என்ற அழைக்கப்படுற தேவியில் கையில், வீணைக்குப் பதிலாக ஜப்பான் நரம்பிசைக் கருவியான பீவா பொருத்தப்பட்டிருக்கிறது. வெள்ளைத் தாமரை மீது, வெண்ணிற ஆடையில் கட்சியளிக்கிறார் பென்சைதீன்.  



ஜப்பான்: பென்சைதீன்

தீபேத்: யங் சென் மா

பண்டையக்காலச் சமயங்களிலும், சரஸ்வதி தேவியின் தாக்கம் இருந்திருக்கிறது. கிரேக்கத்தில் அத்தேனா என்றும்,  ரோமப்புரியில் மினெர்வா என்றும், எத்துருஸ்கானில் மென்றவா என்றும் அழைக்கப்படுகிற தேவிகள் சரஸ்வதி தேவியை ஒத்து உள்ளனர். வெள்ளை ஆந்தையுடனும் வெண்ணிற ஆடையுடனும் இவர்கள் தோற்றமளிக்கிறார்கள். சில ஓவியங்களில் போர் ஆடையுடனும் காட்சித்தருகிறார்கள். எகிப்தில் நேய்த் என்ற தேவி சரஸ்வதி அம்சமாக கருதப்படுகிறார். இவரும் நீர், நதியோடு தொடர்புப்படுத்தப்படுகிறார்.  பிரிட்டனில் தோற்றம் கண்ட செல்டிக் என்ற  பண்டையக் கால மதத்தில் சரஸ்வதி தேவி, சுலீஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  

நேய்த்

மினெர்வா

அதென்னா





இந்த மாதிரி இன்னும் எத்தனை தேசங்களில் அன்னை சரஸ்வதி வேறு பெயர்களில் வேறு தோற்றத்தில் வழிப்படப்படுகிறார் என்று தெரில. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இங்க சொல்லிட்டேன். என்னத்தான் சமயம் மதம் என கடவுளரை வகைப்படுத்தினாலும், வேறுப்படுத்தினாலும், அதன் தொடக்கப் புள்ளி மனித வாழ்க்கையின் செழிப்பை மையமாக கொண்டிருக்கிறது. கல்வி ஞானம் என்பது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமானது. பூஜை புனஸ்காரத்தோடு நிறுத்தி விடாமல், கல்வியின் அவசியத்தையும், கலையின் புனிதத்தையும், அறிந்து தெளிதல் அவசியமாகிறது. அதனால்தான், உலகில் பல பகுதிகளில் ஞானம் என்பது தெய்வமாக வழிப்படுப்படுகிறது. 

இந்த சரஸ்வதி பூஜையன்று, இந்த தெளிதலும், புரிதலும் அவசியம் என்பதால்தான் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஞான தேவியின் ஆசி அனைவரும் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். என்ன பாக்குறீங்க, வாழ்த்துகள்னு சொல்லிட்டேன்னா??. அதெல்லாம் சொல்லலாம். எல்லாத்துக்கும் சட்டத்தைப் போட்டு வட்டத்தில் வாழாமல் எது தேவையோ அதை அறிந்து செயல்படுவோம்! சரஸ்வதி மாதாக்கே ஜெய்!

இப்படிக்கு,
ஸ்ரீ குமரன். 


Comments

  1. பல நாடுகளில் புகழ்பெற்ற சரஸ்வதி தேவியின் வரலாற்றை மிகவும் ஆழகாக வடிவமைத்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி