ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்



சதையும் ரத்தமும் மட்டுமே மனிதனின் தேகம் அல்ல.. உணர்வுகளும் கலந்திருக்கின்றன. அவற்றின் நாட்டங்களில்தான் மனிதனின் வாழ்க்கை அலை மோதிக்கொண்டிருக்கிறது. அலைகளுக்குத் தெரியாது அவை ஏன் தரையோடு மோதிக் கொண்டிருக்கின்றன என்பது. கடலின் ஆழ்மட்ட அழுத்தத்துக்கு மட்டுமே தெரியும் அதன் ரகசியம். மனிதனின் ஆழ் மன ரகசியங்களும் அப்படித்தான். 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அதை கடந்து குடும்பம் சமூகம் வெளியுலகம் என தன்னுடைய உலகை இருளாக்கிக் கொண்டுதான் வாழ்கிறான். தனது உலகத்தை வெளிச்சமாக்கிக் கொள்கிறவர்கள் வெளியுலகில் இருளைக் காண்கிறார்கள். இரு உலகையும் வெளிச்சமாக்க முயல்கிறவர்கள் கடைசிவரைக்கும் வாழாமாலே மடிகிறார்கள். 

எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதற்குள் ஆயுள் காணலாகிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், எப்படி வாழ வேண்டும் என்ற அளவுக் கோளைத் தேடியே காலத்தைக் கரைக்கிறார்கள்.

ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவை சமூகம் எடுத்துக் கொள்கிறது. அப்படியென்றால் அந்த வாழ்க்கை சமூகத்துடையதா?.. பிறகு நமது வாழ்க்கையில் நமது பங்கு?. ஓர் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என நாமே ஒரு வரையரையை வகுத்து விட்டோம். அந்த வரையரை எப்போது தோன்றியது. யார் தோற்றுவித்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் நிசப்தம். 

ஒழுங்கு குன்றி கிடந்த சமூகத்தை சரிப்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள்தான் இந்த கலாச்சாரம், நாகரிகம் எல்லாம். காலத்துக்கும் வசதிக்கும் ஏற்றாற்போல் அவையும் மாற்றம் காண்கின்றன. ஆனால் அந்த மாற்றத்தைக் கூட யார் யாரோ முடிவு செய்கிறார்கள். இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். அவை ஒத்துப் போகும் போது ஓரினமாக அடையாளம் காண்கிறார்கள். இனத்தின் அடையாளமாக இருக்க வேண்டிய கலாச்சாரம், தனிமனித வாழ்க்கையையும் பாதிக்கிறது. 

மனித மரபுகளை மீறிய உணர்வுகளின் வெளிப்பாடு தவறாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வகையில் தவறும் கூடத்தான். வாழ்க்கை மரபுகளுக்கு ஒத்து பயணிக்கும் போது எந்த கோளாறும் இல்லை. அதுவே வழிமாறிப்போகும் போது பாவம் பயணிப்பவர்த்தான் என்ன பண்ண முடியும். எல்லாம் நாம் வாழ்வதை பொருத்துத்தான் இருக்கிறது என்பவர்களுக்கே தெரியும், வாழ்க்கை சில சமயங்களில் எதிர் திசை அலைகளாக மாறக்கூடும் என்று. அதில் சிக்கிக் கொள்கிறவர்களோ, எதிர்நீச்சல் அடிப்பதா, அலையோடு மடிவதா என்று சிந்திப்பதுக்குள் மூழ்கிப் போகிறார்கள்.

உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பளித்த காலத்தில், ஒழுக்கம் இல்லை. ஒழுக்கத்துக்கு மதிப்பளிக்கிற காலத்திலோ உணர்வுகள் சாகின்றன. இதில் எது மனிதனுக்குத் தேவை?.. ஒழுக்கம் மீறாத உணர்வுகள். 

உணர்வுகள் மனிதன் வாங்கி வந்த வரம், சில சமயம் சாபம். வகுக்கப்பட்டிருக்கும் முறைகளை மீறிய உணர்வுகள் இழிவாக்கப்படுகின்றன. ஆனால் அந்த இழிவை ஒவ்வொரு மனிதனும் கடந்துதான் வருகிறான். அதை கையாளத் தெரிந்தவன் வாழ்கிறான். சஞ்சலம், சபலம், அக இயல்பு, புராணங்களும் கூறுகின்றன. அந்த இயல்பு இழிவுக்குள் நழுவாமல் இருக்கவே காற்றாடியை இழுத்துப் பிடித்திருக்கும் கயிற்றைப் போல் நமது மரபுகள் இருக்கின்றன. ஆனால் அந்த கயிறு கழுத்தை இறுக்கக் கூடாது. 

கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீறிய ஒன்று இந்த உலகுக்கு அவசியமாகிறது. அதுதான் புரிந்துணர்வு. சக மனிதனின் தேவையையும், தேடலையும் புரிந்துக் கொள்ளும் அந்த பக்குவம்தான் தேவை. துணையை இழந்தவர் வேறோரு துணையைத் தேடுவதில் தவறில்லை. முதுமையில் தனிமையில் வாடுபவர் தேடும் துணை தவறில்லை. எதிர் பாலினர் மீது ஈர்ப்பு இல்லாதவர் ஓரின வாழ்க்கையை நாடுவது தவறில்லை. வேற்று மதக் காதல் தவறில்லை. ஜாதி விட்டு ஜாதி திருமணம் தவறில்லை. அவர்களின் தேவையும் தேடலும் அதுவாக இருக்கும் போது. 

இவற்றை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்றாலும், புரிந்துக் கொண்டாலே, பலரின் மனசுமை குறையும். இந்த உலகம் அபூர்ணமானது. அதை ரசிக்கும் ஆற்றம் நம்முள் பிறக்கும் போது அனைத்தும் ஏற்றக் கொள்ளப்படும். பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் நடத்தப்படும் இந்த நாடகம் பாத்திரங்களின் அழகை வெளிக்காட்டட்டும். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். 


எழுத்து,
ஸ்ரீ குமரன் முனுசாமி



Comments

  1. Play Free Casino Games - YouTube - Videoodl.cc
    Free online convert youtube video to mp3 casino games on YouTube. Play free casino games. Play casino games online. Sign up today! No download. Play for real.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!