இறந்தாலும் காதல் இறக்காதம்மா!



"என்னெங்க சீக்கிரம் எழுஞ்சிருங்க.. மணியாச்சு.. எவ்ளோ நேரம் அந்த அலார்ம் அடிச்சுக்கிட்டே இருக்கு.."..அய்யெய்யெய்யே, இந்த அலார்ம்மே விட இவ காத்தரதுதான் பெருசா இருக்கு.. என் பொண்டாட்டிதாங்க. நேத்து நைட்டு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே பாராத்திரி ஆச்சு. சரியாவே தூங்கல. சரி இன்னிக்கு லீவுதானே, தூங்கலாம்னு பாத்தா.. எங்கயாவது நிம்மதியா தூங்க விடுறாளா..ம்ம்ம் எல்லாம் என் தலையெழுத்து. நான் போய்யி குளிச்சுட்டு வரேன்.

"என்னங்க இது, குளிச்சிட்டு வீட்டு சட்டையோடு இருக்கிறீங்க? வேலைக்குப் போல".. "ம்ம்ம்.. இன்னிக்கு லீவு. நல்லா தூங்கலாம்னு பாத்தா, நல்ல செஞ்சுட்டே!".. நான் சொன்னது அவளுக்கு சுருக்குன்னு பட்டுச்சான்னு தெரில. முகம் கொஞ்சம் லைட்டா மாறுனுச்சு. " சரி சரி, பசியாறையே எடுத்து வை, என்ன ஸ்பெஷல்?" ன்னு கேட்டோன்னே அவள் முகத்துல புன்னகை திரும்பிச்சு."பொடி இட்லிங்க, உங்க ஃபேவரட்!"ன்னு என் ப்ளேட்ல 4 இட்லிய வச்சு, சட்னி, சாம்பாரையும் ஊத்துன்னா. ப்பா என்ன வாசனை. ஆனா இவ அவ்ளோ டேஸ்ட்டா சமைக்கா மாட்டாளே. சரி சப்டுத்தான் பாப்போம். "வாட்ட், சிரியஸ்லீ???".. "திலா, இத நீதான் சமைச்சியா??இல்ல எங்கம்மா கொடுத்து விட்டாங்களா".. அவள் சிரிச்சா, ஆனா பதில் சொல்லல்ல. அவ முகத்துல ஒரு ஏமாற்றமும் தெரிஞ்சுச்சு. சரி இதுக்கப்புறம் எதுவும் சொல்ல வேணாம்னு அமைதியா சாப்பிட ஆரம்பிச்சேன். 

"என்னங்க உங்கம்மா கோல் பண்ணிருக்காங்க".. மேச மேலே ஃபோன்னெ வச்சிட்டு அவ கிட்சனுக்குள்ள போயிட்டா.. "ஹேலோ, சொல்லுங்கம்மா?".. "எப்படிடா இருந்துச்சு இட்லி? நல்லா இருக்கா?".. "ஓஓஓ.. நீங்கதான் கொடுத்து விட்டீங்களா?".."ம்ம்ம்.. நீ வேற, நேத்துலேருந்து உன் பொண்டாட்டி என்ன உண்டுஇல்லன்னு பண்ணிட்டா. எப்படி அத்த பொடி இட்லி செய்றது, சாம்பார் வக்கிறது, சட்னி வக்கிறதுன்னு, கேட்டு கேட்டு, பண்ணா. அதான் எப்படி பண்ணிருக்கான்னு கேட்டேன். அதுக்குதான் சொன்னே, சமைக்க தெரிஞ்ச பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோன்னு.".. "சரிம்மா, விடுங்க.. ஆரம்பிக்காதீங்க. எல்லாம் நீங்க சமைச்சே மாதிரியே இருந்துச்சு..".. "ஆ, விட்டுக் கொடுப்பியா, உன் பொண்டாட்டிய. சரி சரி,, பாய்..".."பாய் ம்மா"..

திலா, திலோஷினி வடிவழகன். லவ் பண்ணா இப்படி ஒரு பொண்ணத்தான் லவ் பண்ணன்னும்னு எல்லா பசங்களும் நினைக்கிற மாதிரியான அழகு. மொத வாட்டி பார்த்தோனே நானே விழுந்துட்டேன், கீழ இல்ல, காதல்ல. அவ என் ஜூனியர்த்தான். எத்தனையோ ஜூனியர் கீர்ல்ஸ் இருந்தாலும், நான் அவளையே தொரத்தி தொரத்தி ரேகிங் பண்ணேன். அத பாத்து பசங்கெல்லாம், வெடைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது அவளுக்குப் புடிக்கல. ஒரு தடவ என்கிட்ட வந்து " அண்ண,உங்க ஃபெரண்ஸ் எல்லாம், உங்கள வச்சு என்ன வெடைக்கிறாங்க. எனக்கு போய் ஃபெரண்ட் இருக்கு. அவுங்கிட்ட சொல்லிருங்க."ன்னு சொல்லிட்டுப் போய்டா. அப்போ அது அவுங்களுக்கு சொன்னா மாதிரி தெரில. எனக்கு சொன்ன மாதிரியேதான் இருந்துச்சு. 

அதுக்குப்பறம், அவள நான் பாக்கறது பேசறது கொறஞ்சுப் போச்சு. ஆனா, அவள நெனைக்கிறது நிப்பாட்டுல. ரொம்ப லவ் பண்ணிட்டனான்னு தெரில. என்னால சகஜமா இருக்க முடில. திருட்டுத்தனமா, அவ ஃபேஸ்புக்கலாம் செக் பண்ணுவேன், அவ போற இடத்துக்கெல்லம் போயி ஒரு ஓரமா சீன் போடுவேன். ஆனா அவளுக்கு என் மேலே கொஞ்சங்கூட ஃபீலிங்க்ஸ் வரல. உண்மையாவே யாரையோ லவ் பண்றான்னுத்தான் நெனைக்கிறேன். ம்ம்.. அந்த லவ் புட்டுக்கணும்ன்னு நானும் வேண்டாத சாமி இல்ல.. ஆனா அப்படி நடக்கறமாதிரியே தெரில. என்ன பாக்குறீங்க. அதெல்லாம் தப்புங்குறீங்களா. அட போங்க, காதலிச்சுப் பாருங்க. அப்பத்தான் தெரியும். தப்பெல்லாம், ரைட்டா தெரியும், ரைட்டெல்லாம் தப்பா தெரியும்.

அவ பின்னாடி லோ லோன்னு சுத்தி அன்னிக்கோட ஒரு வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு வாரத்துல எல்லோரும் பாலிக் கம்போங் பண்ணிருவாங்க. எனக்கு அதுதான் கடைசி வருஷம். அதுக்கப்புறம் அவள பாக்கவே முடியாது. இனிமேலயும் அவ என்ன காதலிப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல. இருந்தாலும், கடைசியா அவகிட்ட பேசிட்ட மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு தோனுச்சு. கெஃபேல தனியாத்தான் ஒக்காந்துக்கிட்டு இருந்தா. லைட்டா அல்லுதான். இருந்தாலும் பேசிறலாம்னு அவ முன்னுக்குப் போய் ஒக்காந்தேன். அவ என்ன நிமிர்ந்து பாத்தா.அய்யோ என்ன கண்ணுடா?? இந்த கண்ணுத்தானே என்ன இவ்ளோ பண்ணுது. அத புடிங்கிட்டுப் போயிரட்டா?.. வேணா வேணா.. அவகிட்டேயே இருக்கட்டும்...

"ஹெலோ, சீனியர்!" என்னத்தான்.. அவ என்னத்தான் கூப்பிட்டா. என்னாச்சுன்னு கேட்டா.. "ஒன்னும் இல்ல, சும்மா பேசலாம்னுத்தான் வந்தேன்"ன்னேன்..  அவ சிரிச்சா.. அழகா இருந்துச்சு."திலா, ரொம்ப அழகா இருக்க"ன்னு சொன்னேன்.. "டெங்க்ஸ்"ன்னா சின்ன புன்னகையோடு.  "அப்புறம், அடுத்து என்ன ப்ளேன்"ன்னு கேட்டா. நான் சிரிச்சிட்டு.." வேல, அதுக்கப்புறம் கல்யாணம்"ன்னு சொன்னேன்.. "அதுக்குள்ளயா"ன்னு அவ சிரிச்சா. அவளுக்குப் புரிஞ்சிருக்குன்னு நெனச்சேன். ஆனா அவ புரியாத மாதிரியே நடிச்சா. " சரி சீனியர், எனக்கு வேல இருக்கு. ஆல் தே பேஸ்ட் டூ யூ! டேக் கேர் பண்ணிக்கோங்க. வாய்ப்புக் கெடைச்சா பாக்கலாம்".. அவ புன்னகையோடுத்தான் போனா, ஆனா என் மனசையும் திருடிட்டு போனா.எனக்கு ஒரே ஃபீலிங்கா போச்சுங்க...

"என்ன சீனியர், திலா ஒகே சொல்லிட்டாளா?" யாருன்னு திரும்பிப் பாத்தேன்.. திலோவோட ஃபெரண்டுதான்.. அவ்ளோ நேரம் நாங்க பேசனத ஒட்டுக் கேட்டு இருந்துச்சுப் போல.. எல்லா கோலேஜ்லெயும் இப்படி ஒன்னு இருக்கும் போல.. "சொல்லுங்க சீனியர்"ன்னா. நான் இல்லன்னு தலையாட்டுனேன்.. "விட்டுறாதீங்க சீனியர், அவ இப்போ சிங்கள்தான்னு சொன்னா".. "என்னாது.. திலா சிங்கல்லா".. ம்ம்ம்.. காய்ஸ் இதுக்கு முன்னாடி இந்த பிள்ளையப் பத்தி நான் தப்பா பேசனது மறந்திருங்க. அது எனக்கு இப்போ தெய்வம்.. ஒரு லட்சம் வெள்ளி நம்பர் அடிச்ச மாதிரி சந்தோஷம். நான் திரும்பி திலா போன பாதைய பார்த்தேன். அவ கொஞ்ச தூரம் போயிட்டா. அவ என்ன திரும்பி பாக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன்..வேய்ட் பண்ணேன்.. 1, 2, 3, 4, ஆஆஆ.. பார்த்துட்டா..திலா என்ன பார்த்துட்டா..நான் பார்த்தேன் அவ என்ன பார்த்து ஸ்மாய்ல் பண்ணா... அப்போ லவ்வுதானே... 

இது என்ன கேள்வி.. லவ்வுதான், இல்லன்னா இப்போ கல்யாணம் பண்ணிருப்போமா. அப்ப அவ சிரிச்சா அந்த சிரிப்புலதான் எங்க காதல் தொடங்குன்னுச்சு. கிட்ட தட்ட 4 வருஷம் தெனற தெனற லவ் பண்ணும். எங்கம்மாவுக்கு அவ்ளோ விருப்பம் இல்ல. ஆனா நான் ஒத்தாக்கால்ல நின்னு திலாவத்தான் கல்யாணம் பண்ணுவென்னு பண்ணேன். இன்னிக்கு கல்யாணம் பண்ணி ஒரு வருஷம்தான். ஆனா எல்லாமே மாறிருச்சு. எங்களுக்காக ஓடி ஓடி ஒழைக்கத்தான் முடியுது, ஒன்னா டைம் ஸ்பேன்ட் பண்ண முடில. காதல் இன்னும் இருக்கு, ஆனா அத காட்ட முடில. அவ முகத்த பாத்தாலே, இந்த பில்லு கட்டணும், அந்த காசு கட்டணும்னுத்தான் தோனுது.

இன்னிக்கு நான் அவகிட்ட எரிஞ்சு விழுந்திருக்கக் கூடாதுல. ம்ம்ம்.. கல்யாணதுக்கு முன்னாடி ஒன்னு விடாமே எல்லாத்தையும் அவகிட்ட சொல்ற நான் இன்னிக்கு லீவுங்கறது நேத்தே அவகிட்ட சொல்லிருக்கணும். இப்படி ஒன்னு ஒன்னா மாறது பாக்கறப்போ, எனக்கே என் மேலே டவுட் வருது..உண்மையாவே நாம லவ்தான் பண்ணோமான்னு. ஒரு மாதிரி கில்டியா இருக்கு.. ம்ம்ம்..சோரி திலா... 

என்ன?.. ஆங்??.. "இத அவக்கிட்ட போய் சொல்லுங்கிறீங்களா".. ம்ம்.. சரி சொல்றேன். தோ, கிட்சன்ல ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கா. என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கான்னனே தெரில.. "திலா".. 

அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள்.. நான் அவளைப் பார்த்தேன். அதே விழிகள் ஏக்கம் ததும்ப ஈரத்தில் நனைந்திருந்தன. என் விரல்களோ, ஸ்லோ மோவில் சென்று, அவள் கண்ணீரைத் துடைக்க முற்பட்டன. வண்டைச் சிறைப்பிடித்த பூவாக, என் விரல்களைச் சிறைப்பிடித்தது அவளின் கரம். என் கரத்தை அவள் கண்ணத்தோடு அழுத்திக் கொண்டாள். ஆசை முத்தமிட்ட இந்த கண்ணத்தைத் தொட்டுப் பார்க்கவா, இந்நாள் வரை நான் காலத்தைத் தேடினேன். காலத்தைத் தேடி, காத்திருக்கும் காதலைத் தொலைத்திருப்பேனே. புரிந்துக்கொண்டேன்..வசதியாக வாழத்தான் காசு தேவை.. வசந்தமாக வாழ காதலும் தேவை!

காதலர் தின வாழ்த்துகள்!


எழுத்து, ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்