தமிழரின் மதம்

தமிழர்களின் ஆதி கடவுள் நம்பிக்கை என்ன?
சூரியன், நீர், நிலம், ஆகாயம், மரம் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிப்பாடும், குலம் காக்க உயிர் நீத்த வீரர்களையும், முன்னோர்களையும், வணங்கும் குலத்தெய்வ வழிப்பாடுமாகவே இருந்திருக்கின்றன.
சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து மறைபவர்கள் தெய்வமாக வணங்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
வைதீகம் என்பது பிறகு பல்லவர் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
தமிழரின் ஆதி நம்பிக்கையில் இன்று வைதீக தாக்கங்கள் இருந்தாலும் மாறாத ஒருசில வழிப்பாட்டுமுறைகள் பின்பற்ற படுகின்றன.
தெய்வங்களாக வழிப்படப்பட்ட சிலர் சிறுத்தெய்வங்களாகவும், காவல் தெய்வங்களாகவும் மாற்றப்பட்டனர். பெரும்பான்மையினர் வணங்கிய ஒரு சில தெய்வங்களை வைதீக கடவுள்களாக மாற்றிக் கொண்டனர். அப்படி சங்க இலக்கியங்களில் காணப்படும் முக்கியத் தெய்வங்கள் வேலோன், மாயோன், கொற்றவை, வேந்தன், வருணன்.
சங்க இலக்கிய சான்று:
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
சங்கக் காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்தாக பிரிக்கப்படுகின்றன. அந்தந்த நிலத்திற்கு ஏற்ப தெய்வங்களும் வழிப்படப்பட்டிருக்கின்றனர். மலைப் பகுதியான குறிஞ்சியில் முக்கிய தொழிலாக விளங்கிய வேட்டைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு வேல் ஏந்திய முருகக்கடவுளை தமிழர்கள் வணங்கினர். காடுகள் நிறைந்த பகுதியான முல்லையில் திருமாலையும், வயல் நிறைந்த நிலப்பரப்பில் இந்திரனையும், கடல் சார் நிலப்பரப்பில் வருணனையும் வணங்கியுள்ளனர். பாலை நிலம் இருண்டநிலமாகவும் வெப்பம் மிகுதியால் வறண்ட நிலமாகவும் கூறப்படுகிறது. இந்நில மக்களின் தெய்வம் கொற்றவை என்னும் தாய் தெய்வம்.
சங்க இலக்கியங்களை வைத்து இதுதான் தமிழரின் ஆதி வரலாறு என்று உரைத்திட முடியாது. தமிழ்சங்கம் மூன்று முறை நடைபெற்றதாகவும், அதை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்றும், இன்று நம்மிடம் உள்ளது கடைச்சங்க நூல்களே என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பு கடல்கோளால் அழிந்து விட்டதாகவும், மக்களோடு இலங்கிய சான்றுகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டன..
தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பா??? கடல்கோளால் அழிந்து விட்டதா???
"(தென்புலம் வாழ்நர்க்கு)அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்"
என புறநானூற்றிலும்..
"(தென்புலத்தார்) தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"
என திருக்குறளிலும் குறிப்பிடப்படும் தென்புலத்தார் யார்?. அவர்களை நம் முன்னோர்கள் என பொருள் கூறப்படுவதும் ஏன். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். எப்படி இருந்தார்கள்?
தொடரும்.... #skmகிறுக்கல்
Comments
Post a Comment